சீனாவின் மறைமுக மிரட்டலை எதிர்கொள்ளும் வகையில், அதிநவீன Rafale போர் விமானங்களை மேற்கு வங்கத்திலுள்ள Hasimara விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்‍க இந்தியா திட்டமிட்டு வருகிறது.

France நாட்டின் தயாரிப்பான அதிநவீன Rafale போர் விமானங்களை வாங்கிட கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

இதன்படி, 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், அணுஆயுதங்களை ஏற்றிச்செல்லும் திறன் படைத்த 36 Rafale போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்‍கு வாங்கப்படுகிறது.

இவற்றில் 18 போர் விமானங்கள், 2019-ம் ஆண்டு பிற்பகுதியில் மேற்குவங்க மாநிலம் Hasimara விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்‍கப்பட உள்ளன. தற்சமயம் இந்த விமானப்படைத் தளத்தில் நிறுத்தி வைக்‍கப்பட்டுள்ள MIG-27 ரக போர் விமானங்கள், அடுத்த 3 ஆண்டுகளில் வாபஸ்பெறப்பட உள்ளதாலும், சீனா அவ்வப்போது விடுத்துவரும் மறைமுக மிரட்டல் காரணமாகவும், இந்த நடவடிக்‍கையை இந்தியா மேற்கொள்கிறது.

எஞ்சிய 18 போர் விமானங்களை உத்தரப்பிரதேசத்தில் உள்ள Sarsawa விமானப்படைத் தளம் உள்ளிட்ட வேறு சில இடங்களில் நிலைநிறுத்துவது குறித்து ஆலோசிக்‍கப்பட்டு வருகிறது.