Asianet News TamilAsianet News Tamil

கிபூரி ஹீ... கெடுவோ ஹீ... இல்லாத ஆறுகளை உரிமை கோரும் சீனாவின் குறும்பு!

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு புதிய பெயர்களைச் சூட்டிய சீனா இல்லாத இரண்டு ஆறுகளுக்கும் உரிமை கோரியுள்ளது.

China renames non-existent rivers, piece of land in Arunachal Pradesh
Author
First Published Apr 6, 2023, 10:10 AM IST | Last Updated Apr 6, 2023, 10:10 AM IST

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு சீனா புதிய பெயர்களைச் சூட்டி அவற்றை உரிமை கோரியுள்ளது. சீனா வெளியிட்டுள்ள பெயர்ப் பட்டியலில் தனிமைப்படுத்தப்பட்ட வனப்பகுதிகள், மலைச் சிகரங்கள், இல்லாத ஆறுகள் மற்றும் சிறிய நிலப்பகுதிகள் ஆகியவை உள்ளன. திபெத்தின் நியிஞ்சி மாகாணத்தில் உள்ள கோனா, ஜாயு மற்றும் மெடோக் ஆகிய கவுண்டிகளும் சீனாவின் பெயர்மாற்றப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

உதாரணமாக, சீனா "கிபூரி ஹீ" மற்றும் "கெடுவோ ஹீ" எனப் பெயரிடப்பட்ட இரண்டு ஆறுகள் எங்கு உள்ளன என்று குறிப்பிடப்படவே இல்லை. வெறுமனே "குறிப்பிட்ட இடங்கள்" என்று மட்டும் கூறுகிறது. தவாங் மாவட்டத்தில் உள்ள இந்தியாவின் கடைசி கிராமமான ஜெமிதாங்கிற்கு அப்பால் உள்ள காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் உள்ள "ஒரு நிலப்பகுதி"க்கு "பாங்கின்" என்று பெயரிட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 10 முதல் 21 வரை மேற்கு வங்கத்தின் கலைகுண்டா விமானப்படை தளத்தில் இந்திய - அமெரிக்க விமானப் படைகள் போர் பயிற்சியில் ஈடுபட உள்ள நிலையில், மறுபெயரிடும் பட்டியல் வெளியாகியுள்ளது சீனாவின் "வெறும் குறும்பு" என்று இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் ஏப்ரல் 2ஆம் தேதி சீன, திபெத்திய, பின்யின் எழுத்துகளில் பெயர் பட்டியலை வெளியிட்டது. முன்றாவது முறையாக இதுபோன்ற பெயர்ப்பட்டியலை வெளியிட்டுள்ள சீனா இவற்றை, "தெற்கு திபெத்தில் உள்ள பொது இடங்களின் பெயர்கள்" என்று குறிப்பிட்டுள்ளது. பட்டியலில் "ஜியாங்காசோங்" என்று பெயரிடப்பட்டிருப்பது ஒரு குடியேற்றப் பகுதியாகும். இது ஜவஹர் நவோதயா வித்யாலயாவின் மேற்கில் உள்ள தவாங் நகரத்தில் உள்ளது.

"தாடோங்" என்று பெயரிட்டுள்ள மற்றொரு குடியேற்றப் பகுதி அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள டாட்டோ நகரத்தில் இருக்கும் ஒரு பெரிய திறந்தவெளி ஆகும். "குயுடோங்" என்று பெயரிடப்பட்ட மற்றொரு "நிலப்பகுதி" கிழக்கு அருணாச்சலத்தில் உள்ள அஞ்சாவ் மாவட்டத்தில் கிபித்தூவின் வடக்கே லோஹித் ஆற்றின் மேற்குக் கரைக்கு அருகில் உள்ள காடுகளைக் குறிக்கிறது. "லுவோசு ரி", "தீபு ரி", "டோங்சிலா ஃபெங்", "நிமாகாங் ஃபெங்" மற்றும் "ஜியுனியூஸ் கங்ரி" ஆகியவை அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மலை உச்சிகளைக் குறிப்பவையாக இருக்கின்றன.

சீனா அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளை உரிமைகோரியுள்ளதை இந்தியா நிராகரித்துள்ளது. ஆனால், சீனா இவை திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னானில் உள்ளவை என்று சொல்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios