திபெத்திய எல்லைப் பகுதியில் படைகளை குவித்தும், போர் ஒத்திகை நடத்தியும் வந்த சீன ராணுவம், தற்போது டன் கணக்கில் போர் ஆயுதங்களையும், போர் வாகனங்களையும் குவித்து வருகிறது.

இந்தியா - சீனா இடையே, எல்லையில் உள்ள சிக்கிம்-பூடான்-திபெத் எல்லைகள் சங்கமிக்கும் இடம் யாருக்கும் சொந்தம் என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகும் சமரசம் எட்டப்படவில்லை.

இந்நிலையில் டோக்லாம் பகுதியில் சாலை மற்றும் ரயில் பாதைகளை அமைத்து வந்த சீனாவை, இந்தியா தடுத்ததன் காரணமாக, எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்தியாவிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருக்கும்படி சீன அரசு திடீரென எச்சரிக்கை விடுத்ததையடுத்து இரு நாடுகளிடையே கட்டாயமாக போர் மூளும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் கடந்த 1 வாரமாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது இந்திய எல்லைப் பகுதியில்  சீனா போர் ஆயுதங்களை குவித்து வருவது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
சிக்கிம் எல்லையில் திபெத்தின் வடக்கு பகுதியில் ஷின்ஜியாங் நகருக்கு அருகே இந்த ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

சீன ராணுவம் இந்திய எல்லையை நோக்கி நகர்கிறது எனவும் கனரக போர் ஆயுதங்கள் திபெத் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது எனவும் சீன ராணுவ மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. 

சீன ராணுவம் வடக்கு திபெத்தின் குன்லுன் மலைப்பகுதியை நோக்கி  செல்கிறது எனவும் தெரிகிறது. சீனாவின் இந்த நடவடிக்கை எல்லையில் மேலும் சர்ச்சையை உண்டாக்கும் என தெரிகிறது.