காஷ்மீருக்குள் நுழைந்தால் உங்களால் என்ன செய்ய முடியும் ? தெனாவெட்டாக கேள்வி கேட்கும் சீனா….

இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்குள் எங்கள் ராணுவம் நுழைந்தால் உங்களால்  என்ன செய்ய முடியும் என சீனா கேள்வி  எழுப்பியுள்ளளதால் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் பகுதி உள்ளது. அங்கு இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகளை சீன ராணுவம் அழித்தது.மேலும் அத்துமீறி சாலை அமைத்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் இந்திய படைகள் குவிக்கப்பட்டன. இதனால், 50 நாட்களாக அப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. படைகளை வாபஸ் பெறுமாறு சீனா விடுத்த எச்சரிக்கையை இந்தியா நிராகரித்து விட்டது. 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்திய பத்திரிகையாளர்களுக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை விவகார துணை தலைமை இயக்குனர் வாங் வென்லி பேட்டி அளித்தார்.

அப்போது டோக்லாம் பகுதியில் ஒரே ஒரு இந்திய வீரர், ஒரு நாள் இருந்தால் கூட அது எங்கள் நிலப்பகுதியில் அத்துமீறியதாகவே கருதப்படும் என்றும் இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

இரு நாட்டு படைகளும் ஒரே நேரத்தில் வாபசாகி, அவரவர் ஏற்கனவே இருந்த இடத்துக்கு திரும்ப வேண்டும் என்ற இந்தியாவின் யோசனை ஏற்கத்தக்கது அல்ல என தெரிவித்த அவர், இந்தியா முதலில் தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றார்.

இந்தியா, நேபாளம், சீனா ஆகிய 3 நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் காலாபாணி பிராந்தியம் உள்ளது. அந்த இடத்திலோ அல்லது இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சினையாக உள்ள காஷ்மீரிலோ சீன ராணுவம் நுழைந்தால், இந்தியா என்ன செய்யும்?  என்றும் அவர் திமிராக பேசினார். சீனாவின் இந்த பேச்சு இரு நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.