டெல்லியில் அனுமதியின்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி சீனப்பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

டெல்லி நகர் முழுவதும் தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள், அனைத்து பகுதிகளில் உள்ள குடோன்களிலும், வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையி, டெல்லி துக்ளகாபாத்தில் உள்ள கன்டெய்னர் டெர்மினலில், சீனப் பட்டாசுகள் பதுக்கி வைத்துள்ளதாக, வருவாய் புலனாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்த்து. அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு கன்டெய்னரில் இருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகளில் சீனப்பட்டாசுகள் மறைத்து வைத்திருந்த்தை கண்டுபிடித்தனர்.

பின்னர், அங்கிருந்து அனைத்து பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மொத்த மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது.. இந்த பட்டாசுகளை பஞ்சாப்பை சேர்ந்த இறக்குமதியாளர் ஒருவர் சட்டவிரோதமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் அங்கிருந்து எடுத்து சென்றனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் பட்டாசு விற்பனை செய்தல் மற்றும் சேர்த்து வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.