கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வீட்டில் உண்டியல் வைத்து பணத்தை சேமித்தனர். சிலர், வங்கியில் சேமித்தனர். அவசர தேவைக்கு உண்டியலை உடைத்தும், வங்கியில் உள்ள தனது கணக்கில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்தனர்.
நாளடைவில் தொழில்நுட்ப வளர்ச்சியால், ஏடிஎம் மையம் துவங்கப்பட்டு, எந்நேரத்திலும் அவசர ஆபத்துக்கு பணம் எடுக்கும் நிலை தற்போது உள்ளது. இதனால், பொதுமக்கள் நள்ளிரவு நேரத்திலும் பணத்துக்காக யாரிடமும் கடன் வாங்கவோ, பணம் இல்லாமல் தவிக்கும் நிலையோ இல்லை.
ஆனால், இதுபோன்று அவசர தேவைக்கு பணம் எடுக்கும்போது, அதில் கள்ள நோட்டுகள் வந்தன. சில நோட்டுகள் ஒருபுறம் மட்டும் அச்சிடப்பட்டு வந்தன. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து, வங்கி அதிகாரிகளிடம் புகார் கூறியபோது, அதுபற்றி விசாரிப்பதாக கூறினர்.
இந்நிலையில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற ஒருவருக்கு, சிறுவர்கள் விளையாட்டுக்கு பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் வந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி, விஹார் பகுதியை சேர்ந்தவர் ரோகித். கடந்த 6ம் தேதி ரோகித், அதே பகுதியி உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில், பணம் எடுத்தார். அப்போது, போலி 2000 நோட்டுகள் 4 வந்த்து. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அந்த பணத்தை பெற்று ஆய்வு செய்தனர். அதில், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என குறிப்பிடாமல், சில்ட்ரன்ஸ் பேங்க் ஆப் இந்தியா என்றும், ரிசர்வ் வங்கி குறியீட்டுக்கு பதிலாக பி.கே. என்று அச்சிடப்பட்டு இருந்தது. மேலும், ரூபாய் நோட்டின் வலது ஓரத்தில் "வாட்டர் மார்க்' பகுதியில் "சுரான் லேபிள்' என்று அச்சிடப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீசார் ஒருவரின், ஏடிஎம் கார்டு மூலம் அதே மையத்தில் பணம் எடுத்தனர். அந்த பணமும் அதேபோல் வந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும், வங்கிகளில் இருந்து ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதற்கு, தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் மூலம் ஊழியர்கள் சிலர், பணத்தை மெஷினில் பொறுத்துகின்றனர் என தெரிந்தது.
இதைதொடர்ந்து அந்த ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, கடைசியாக பணத்தை நிரப்பி சென்ற வாலிபரின் முகம் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
