PM Modi : சிறார்களுக்கு தடுப்பூசி.. இன்று முதல் தொடக்கம்..பிரதமர் மோடி வேண்டுகோள் !
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி அடுத்த சில மாதங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வந்தது.
அனைவருக்கும் தடுப்பூசி :
இதன் தொடர்ச்சியாக 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு ஜனவரி 3 முதல் தடுப்பூசி போடப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஜனவரி 10 முதல் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதல் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மருத்துவக் குழுக்கள் நேரடியாக சென்று தடுப்பூசியை செலுத்தி வருகின்றன.இந்நிலையில் பிரதமர் மோடி இன்று ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
பிரதமர் மோடி :
அதில், 'நமது குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முக்கியமான நாள் இன்று.12-14 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையான டோஸ்களுக்கு தகுதியுடையவர்கள். அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நமது குடிமக்களைப் பாதுகாக்கவும், தொற்றுநோய்க்கு எதிரான எங்கள் போராட்டத்தை வலுப்படுத்தவும், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியைத் தொடங்கினோம். நமது விஞ்ஞானிகளும், கண்டுபிடிப்பாளர்களும், தனியார் துறையினரும் இந்தச் சந்தர்ப்பத்தில் உயர்ந்து நிற்கும் விதம் பாராட்டுக்குரியது. ஜனவரி 2021 இல், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்னணிப் பணியாளர்களுக்கான எங்கள் தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கினோம்.
இன்று, இந்தியா 180 கோடி டோஸ்களை வழங்கியுள்ளது, இதில் 15-17 வயதுக்குட்பட்ட 9 கோடி டோஸ்கள் மற்றும் 2 கோடிக்கும் அதிகமான முன்னெச்சரிக்கை டோஸ்கள் அடங்கும். இது கோவிட்-19க்கு எதிராக நமது குடிமக்களுக்கு முக்கியமான பாதுகாப்புக் கவசமாக அமைகிறது. கோவிட் தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.