child sacrificed for cure
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் மாகடி பகுதியை சேர்ந்தவர் முகமது நூருல்லா. இவரது மகள் ஆயிஷா (10). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 1ம் தேதி இரவு ஆயிஷா, தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். திடீரென அவர் மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை அந்த பகுதி முழுவதும் தேடினர். ஆனால், எந்த தகவலும் இல்லை.
கடந்த 3ம் தேதி, மாகடி ஒசஹள்ளி பகுதியில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசியது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சாக்கு பையை திறந்து பார்த்தபோது, கழுத்து அறுக்கப்பட்டு, மாயமான ஆயிஷா சடலமாக இருந்தார். அருகில் மாந்திரீக பொருட்கள் கிடந்தது. இதனால், ஆயிஷாவை நரபலி கொடுத்து இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
முகமது நூருல்லாவின் உறவினர் முகமது வாசில் (42). அதே பகுதியில் வசிக்கிறார். அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால், போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரித்தனர்.
அதில், முகமது நூருல்லாவின் உறவினர் முகமது வாசில் (42). அதே பகுதியில் வசிக்கிறார். இவரது சகோதரர் முகமது ரபீக் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் குணமாவதற்கு, ஒரு சிறுமியை நரபலி கொடுக்க வேண்டும் என, நசீம் தாஜ் (32) என்பவர் கூறியுள்ளார்.
இதனால் நரபலி கொடுக்க சிறுமியை தேடும் பணியில் முகமது வாசில் ஈடுபட்டார். அப்போது கடந்த 1ம் தேதி தனது வீட்டின் முன்பு ஆயிஷா விளையாடுவதை பார்த்த அவர், தனது செல்போனில் படம் பிடித்து, அதனை நசீம் தாஜிக்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, முகமது வாசில், அவரது உறவினர் 17 வயது சிறுவனுடன் சேர்ந்து ஆயிஷாவை, ஆட்டோவில் கடத்தி கொண்டு, ஒசஹள்ளி பகுதிக்கு சென்றனர். அங்கு சிறுமி ஆயிஷாவை நரபலி கொடுத்தனர்.
பின்னர், ஆயிஷாவின் உடலை வைத்து மாந்திரீக பொருட்களால் பூஜை செய்தனர். பூஜை முடிந்ததும் ஆயிஷாவின் உடலை சாக்கு மூட்டைக்குள் திணித்து, அங்கேயே வீசி விட்டு சென்றது தெரிந்தது.
முன்னதாக ஆயிஷாவை காணவில்லை என்று முகமது நூருல்லா தேடிய போது, அவருடன் சேர்ந்து முகமது வாசிலும் தேடி இருக்கிறார். மேலும் தன் மீது எந்த சந்தேகமும் வந்து விடக்கூடாது என்பதற்காக, ஆயிஷா கிடைக்க வேண்டும் என்று, முகமது நூருல்லாவுடன் சேர்ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்தார் என தெரிந்தது.
இதை தொடர்ந்து போலீசார், முகமது வாசில், அவருக்கு உடந்தையாக இருந்த பெங்களூரு கோரி பாளையாவை சேர்ந்த ரசித் உன்னிஷா (38), நசீம் தாஜ் (33) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதேபோன்று நரபலி சம்பவம் வேறு ஏதும் நடந்துள்ளதா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.
