கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வன்முறைச் செயல்களை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று முதல்வர் பினராயிவிஜயனுக்கு ஆளுநர் சதாசிவம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆர்.எஸ்எஸ். நிர்வாகி

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கக்கன்பாரா பகுதியை சேர்ந்தவர் சூரக்காடுபிஜூ (வயது34). இவர் அந்த பகுதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலைவராக இருந்தார். அவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் ைபயனூர் அருகே சென்று கொண்டிருந்தார்.

கொலை

அப்போது, பின்னால் வந்த ஒரு சொகுசு கார் அவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பழிவாங்கும் செயலா?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பிஜூவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தான் கொலை செய்ததாக குற்றம் சாட்டிய பா.ஜ.க.வினர் இந்த கொலையை கண்டித்து கண்ணூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சி.வி.தனராஜ் கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்திருந்த பிஜூவை அரசியல் பழிவாங்கும் நோக்கில் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே கடந்த ஜனவரி மாதம் நடந்த அமைதிப்பேச்சுக்கு பின் நடந்த முதல் கொலை இதுவாகும்.

ஆளுநரிடம் மனு

இந்நிலையில், மாநில ஆளுநர் சதாசிவத்தை நேற்று சந்தித்து , பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ராஜகோபல் உள்ளிட்ட முக்கிய உறுப்பனர்கள் குழு மனு அளித்தனர்.

அதில்,  ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கொலை செய்யப்பட்டதில் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு வந்தபின்,சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த 14பேர் கொல்லப்பட்டுள்ளனர், 500பேர் வரை தாக்கப்பட்டுள்ளனர். வன்முறையாளர்களுக்கு ஆளும் அரசு ஆதரவு தருகிறது என்று தெரிவித்து இருந்தனர். 

ராணுவ அதிகாரச் சட்டம்

இதற்கிடையே  பா.ஜ.க எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபால், “ கண்ணூர் மாவட்டத்தை பதற்றமான பகுதியாக அறிவித்து, அங்கு ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆளுநர் உத்தரவு

இந்நிலையில், பா.ஜனதாவின் கோரிக்கையை ஏற்று ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கொலைக்கு காரணமானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் சதாசிவம் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ஆளுநர் மாளிகை வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது;

மாநிலத்தின் அமைதியை குலைக்கும் இதுபோன்ற கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுங்கள். அமைதியை விரும்பும் மாநில மக்களுக்கு, உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாதகமான சூழலை உண்டாக்கி கொடுப்பது அவசியமாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.