முல்லை பெரியாறு விவகாரத்தில் வேண்டுமென்றே கேரள அரசு தவறான தகவல்களை திட்டமிட்டு வெளியிடுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

கேரளாவில் பெய்த கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதை அடுத்து, அணைகள் திறந்துவிடப்பட்டன. அதனால் கேரளா முழுவதுமே வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில், கேரளாவை சேர்ந்த ரசல் ஜாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாக குறைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். 

கடந்த 24ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக கேரளா மற்றும் தமிழக அரசுகள் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரின் காரணமாகவே கேரளாவில் மழை வெள்ளம் ஏற்பட்டதாக கேரள அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு தமிழக அரசு காரணம் இல்லை. முல்லை பெரியாறு அணையில் இருந்து குறைவான டிஎம்சி அளவு நீரே வெளியேற்றப்பட்டது. அதற்கு முன்னதாகவே இடுக்கி அணையில் இருந்து கேரள அரசு வெளியேற்றிய நீரின் அளவு அதிகமாக இருந்ததும், அங்கு ஏற்பட்ட மழையில் காரணமாகவே கேரளாவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.

இரு மாநிலத்தின் மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையில் 139.99 அடி வரை மட்டுமே நீரினை தேக்கிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

கேரள எல்லைக்குட்பட்ட முல்லை பெரியாறு அணையை தமிழக அரசு பராமரித்து வருகிறது. 155 அடி உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணையில் 142 அடிவரை நீரை தேக்கிக்கொள்ளலாம் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசு, 142 அடி நீரை தேக்குகிறது. ஆனால் கேரள அரசு, அணையின் பாதுகாப்பை காரணம் காட்டி 142 அடி நீரை தேக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறது. 

இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் பூங்காவை திறந்துவைத்த முதல்வர் பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது முல்லை பெரியாறு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, கேரளாவில் கனமழை பெய்வதற்கு முன்பே முல்லை பெரியாறு அணையை பரிசோதித்த நிபுணர் குழு, அணை பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தனர். அதனால் 142 அடி நீரை தேக்கிக்கொள்ளலாம் என்று அவர்களே சான்றளித்துள்ளனர். அதனடிப்படையில் தான் தமிழக அரசு 142 அடி நீரை சேமித்தது. 

155 அடி உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணையில் 142 அடிவரை நீரை சேமிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அணை பலப்படுத்தப்பட்ட பிறகு 152 அடிவரை சேமிக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளது நீதிமன்றம். எனவே அதனடிப்படையில், அணையை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் அதை முடக்கும் விதமாகவும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்திவிட கூடாது என்பதற்காகவும் கேரள அரசு திட்டமிட்டு அணையின் பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை பரப்புகிறது என முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.