ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை வைத்துள்ளது. சிபிஐ கோரிக்கையை ஏற்று நீதிமன்றக் காவலில் ப.சிதம்பரத்தை வைக்க உத்தரவிடப்பட்டால் திகார் சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெறுவதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது 2007-ம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் தலையீட்டால் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. முறைகேடாக இந்த அனுமதி வழங்கியதில் பல மோசடிகள் நடந்துள்ளதாக சிதம்பரம், கார்த்தி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை வழக்குகள் பதிவு செய்தன. 

இந்த வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, ப.சிதம்பரத்தை கடந்த 20-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 5 முறையென மொத்தம் 15 நாட்கள் சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், காவல் இன்றுடன் நிறைவு பெற்றதையடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ கோரிக்கை வைத்தது. ஆனால், சிதம்பரத்திடம் விசாரணை தொடர்கிறது, சாட்சிகளை கலைக்கவில்லை எனவே நீதிமன்ற காவலுக்கு அனுப்ப கூடாது என வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். 

அரசு தரப்பில் வாதிட்ட துஷார் மேத்தா சிதம்பரம் சாட்சிகளை கலைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள், ஆதாரங்களை திரட்ட சிபிஐ அதிகாரிகள் இங்கிலாந்து, பெர்முடா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளனர். மேலும், சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரிக்காத வரை, போலீஸ் காவல் அல்லது நீதிமன்ற காவல் மட்டுமே ஒரே வழி எனவும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

 

எனக்கு எதிராக ஆதாரங்களும் இல்லாத நிலையில் எந்த ஆதாரத்தை கலைக்கப்போகிறேன்? என ப.சிதம்பரம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. நீதிமன்ற காவலுக்கான காரணங்களை சிபிஐ முன் வைக்க வேண்டும். இதனிடையே, அமலாக்கத்துறை அலுவலகத்தில் சரணடைய தயார் என ப.சிதம்பரம் தரப்பில் கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிபிஐ மனு மீது அரை மணி நேரம் கழித்து தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றக் காவலில் ப.சிதம்பரத்தை வைக்க உத்தரவிடப்பட்டால் திகார் சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.