முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது. 

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சிபிஐ எந்த நேரத்திலும் தன்னை கைது செய்யப்படலாம் என்பதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

அவர் தாக்கல் செய்த மனுவில், நான் சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை. எப்.ஐ.ஆர். பதிவில் எனது பெயர் இல்லாத நிலையில், முன்ஜாமீன் மனு எதற்காக நிராகரிக்கப்பட்டுள்ளது என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி ரமணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்ட அவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விற்கு அனுப்பினார். 

ஆனால், நான் ஓய்வு பெறுவதற்குள் அயோத்தி வழக்கை முடிக்க வேண்டும் என்பதால் தலைமை நீதிபதி, சிதம்பரம் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்துவிட்டார். இதனிடையே, சிபிஐ சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், மீண்டும் நீதிபதி ரமணா முன் மீண்டும் முறையிட்டார். 

அப்போது, நீதிபதி ரமணா சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை இல்லை. மனுவில் உள்ள குறைபாட்டை சரி செய்து மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும். சிதம்பரம் மனு பட்டியலிடப்பட்ட பின்னரே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனையடுத்து, பிழைகளை திருத்திய பிறகு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் நாளை விசாரிக்க கோரி முறையிடப்பட்டது. ஆனால், ப.சிதம்பரம் மனுவை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி கூறியுள்ளார்.