ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. 

இதை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே இந்த மனுவை இன்று விசாரிப்பதாக கூறியிருந்தனர்.  

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 26-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.