முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடு என்று பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது, கடந்த 2007-ம் ஆண்டில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றது. இதற்காக நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை முறைகேடாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

இதில், ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி உதவியதாகவும், அதற்கு ஈடாக லஞ்சம் தரப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம், சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அதனையடுத்து, சி.பி.ஐ அவரைக் கைது செய்ய முயற்சித்து வருகிறது. 

நேற்று, மாலையிலிருந்து 3 முறை சிதம்பரத்தின் வீட்டுக்கு சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். வீட்டில் சிதம்பரம் இல்லாத நிலையில்,இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அளித்துள்ளனர். சிதம்பரத்தின் மீது, பழிவாங்கும் நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் குற்றம்சாட்டுகின்றனர். 

இதுதொடர்பாக பிரியங்கா காந்தி அவரது டுவிட்டர் பதிவில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை பாஜக அரசு வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது.சிதம்பரத்துக்கு எப்போதும் காங்கிரஸ் துணை நிற்கும். மத்திய அரசின் தோல்விகளை உண்மையாக பயமின்றி ப.சிதம்பரம் அம்பலப்படுத்தி வருவதால் அவர் வேட்டையாடப்படுகிறார். கோழைகளுக்கு உண்மைகள் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், எந்த பின்விளைவுகள் வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் உண்மையாக போராடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.