சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 22 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். மேலும், 31 வீரர்களுடன் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டம் டாரெம் பகுதியின் சிலேகர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை, பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். 

அப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் எதிர்பாராத விதமாக பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். உடனடியாக பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனா். இந்த மோதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 22 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும்,  31 வீரர்களுடன் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

அதேசமயம், பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 9 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டார்கள். இதில் ஒரு பெண் மாவோயிஸ்டும் அடங்கும். மாவோயிஸ்டுகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதில் வீரர்களின் தியாகம், என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். காயமடைந்த வீரர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.