காங்கிரஸ் கட்சி முதல்வர்கள் பதவியேற்கும் முன்று மாநிலங்களில் இரு மாநில நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்கும் திமுக தலைவர் ஸ்டாலின் சத்தீஸ்கர் மாநில நிகழ்ச்சியில் பங்கேற்காமல் சென்னை திரும்ப இருக்கிறார். 

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வெற்றிக் கொடியை நாட்டியது காங்கிரஸ். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனிவிமானம் மூலம் சென்றுள்ளார். 

ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெல்லாட், துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்பு ஜெயப்பூர் ஆல்பர்ட் மண்டபத்தில்  நடைபெற்றது. இதில் ஸ்டாலின் பங்கேற்றார். மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் பதவியேற்கும் விழா, பிற்பகல் 1.30 மணிக்கு, போபால் ஜம்பூரி மைதானத்தில் நடைபெறுகிறது. முதல்வரான கமல்நாத்துக்கு, ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 

இந்த 2 முதல்வர்கள் பதவியேற்பு விழாவிலும் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பகேல், ராய்ப்பூரில் பதவியேற்கும் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு சென்னை திரும்புகிறார். தொடர் பயணம் களைப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு சென்னை திரும்புவதாகக் கூறப்படுகிறது.