நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22 ம் தேதி சந்திராயன் 2 விண்கலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்டது. நிலவின் வட்டப்பாதையை சுற்றி வந்த சந்திராயனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சனிக்கிழமை (செப்டம்பர் 7) அதிகாலை 1.55 மணிக்கு நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்க இருக்கிறது. இதன் மூலம் இந்தியா சரித்திர சாதனையை நிகழ்த்த இருக்கிறது. விக்ரம் லேண்டர் தரையிறங்க இருக்கும் அந்த 15 நிமிடங்களும் மிகுந்த பதற்றமாக இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கூறிய அவர், " பிறந்த குழந்தையை கைகளில் தூக்கினால் எப்படி பாதுகாப்போமோ அந்த மாதிரி தான் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் தருணம் இருக்கும். அது அங்கும் இங்கும் அலைபாயும். அதை உறுதியாக தரையிறக்க வேண்டும்.அது சற்று சவாலான பணி தான். அதற்காக தான் சுற்றிலும் நான்கு இன்ஜினுடன் நடுவில் ஒரு இன்ஜினும் பொருத்தி இருக்கிறோம்" என்றார்.

நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை பிரதமர் மோடி இஸ்ரோ மையத்தில் இருந்து பார்வையிட இருக்கிறார். பிரதமருடன் இணைந்து இந்த நிகழ்வை பார்வையிட நாடு முழுவதும் இருந்து 60 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நிலவின் தென்துருவதில் விண்கலத்தை செலுத்திய முதல் நாடு என்கிற வரலாற்றுச் சாதனையை கொண்டாட இந்தியா தயாராகி வருகிறது.