நிலவின் சுற்றுப்பாதைக்குச் செல்லும் சந்திரயான்-3! இன்று இரவு 7 மணிக்கு முக்கிய நகர்வு!
ந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 14ஆம் தேதி ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் சந்திரனை நோக்கிய பயணத்தில் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்துள்ளது என வெள்ளிக்கிழமை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மூன்று வாரங்களில் ஐந்து நகர்வுகளில், இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை பூமியின் சுற்றுபாதையில் முன் நகர்த்தியது. ஆகஸ்ட் 1ஆம் தேதி நடந்த முக்கிய நகர்வில் சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பூமியின் சுற்றுப்பாதையைக் கடந்து நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலம் இன்று மற்றொரு முக்கியமான நகர்வை மேற்கொள்ள உள்ளது. நிலவை நெருங்கியுள்ள சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட இருக்கிறது.
லூனார் ஆர்பிட் இன்ஜெக்ஷன் (LOI) எனப்படும் இந்த நகர்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு சுமார் 7 மணிக்கு நடைபெறும் என்று இஸ்ரோ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 சந்திரனுக்கு மிக அருகில் இருக்கும் பெரிஜி என்ற புள்ளியை அடையும்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இன்று இரவு முதல் நிலவைச் சுற்றத் தொடங்கும் சந்திரயான்-3 விண்கலம் இன்னும் சில நாட்களில் நிலவை நெருங்கும். அடுத்தடுத்த சுற்றுகளில் நிலவுக்கும் விண்கலத்துக்கும் இடையேயான தூரம் குறைக்கப்படுவதுடன் வேகமும் படிப்படியாகக் குறையும்.
அடுத்தடுத்த நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடக்கும் பட்சத்தில் சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.