மாவோயிஸ்டுகளால் சந்திரபாபு நாயுடு உயிருக்கு ஆபத்து : மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உயிருக்கு மாவோயிஸ்ட்டுகள் குறி வைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. 

ஆந்திரா – ஒடிசா எல்லைப் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் போலீசார் நடத்திய தாக்குதலில் சுமார் 30 மாவாயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் என கருதப்படும் 15 பேரும் இதில் பலியானார்கள்.

மத்திய குழு உறுப்பினர் அக்கிராஜு ஹரகோபால் காயத்துடன் உயிர்தப்பினர். இந்த தாக்குதல் மாவோயிஸ்டுகளுக்கு மிகப்பெரும் இழப்பாக கருதப்படுகிறது. எனவே அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உயிருக்கு மாவோயிஸ்ட்டுகள் குறி வைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

டெல்லியிலுள்ள ஆந்திரா பவனுக்கு பல முறை வந்து மாவோயிஸ்ட்டுகள் உளவு பார்த்து விட்டு சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது. அங்கு வரும் ஆந்திர முதலமைச்சர் அல்லது அமைச்சருக்கு மாவோயிஸ்ட்டுகள் குறி வைத்திருக்கலாம் என்பதால் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக ஆந்திரா டிஜிபி சாம்பசிவராவ் தெரிவித்துள்ளார்.

டெல்லி போலீசாருடன் தொடர்பில் இருப்பதாகவும், ஆந்திரா பவனிலுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை வழங்குமாறு கேட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆந்திர முதலமைச்சர் சந்திராபாபு நாயுடு மற்றும் அமைச்சர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சாம்பசிவராவ் தெரிவித்தார்.