நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதன் எதிரொலியாக 400 சரக்கு ரயில்கள் மூலம் நிலக்கரி விநியோகம் செய்யப்படும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதன் எதிரொலியாக 400 சரக்கு ரயில்கள் மூலம் நிலக்கரி விநியோகம் செய்யப்படும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் உற்பத்தி ஆகும் 70% மின்சாரம் நிலக்கரியில் இருந்து தான் பெறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியதை அடுத்து மின்தேவை அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ மற்றும் அரசு மருத்துவமனை சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதே போன்று மாநிலங்களிலும் நிலக்கரி இருப்பு குறைந்துள்ளது. இதை அடுத்து மாநிலங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்கும்படி மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்களில் மின்சாரம் உற்பத்தி தடைபட்டு மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து நிலக்கரி தட்டுப்பாட்டை போக்கும் வகையில், மாநிலங்களுக்கு கூடுதல் நிலக்கரியை விநியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மே மாதம் 24 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 753 பயணிகள் மற்றும் அதிவேக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. மாநிலங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை தீவிரப்படுத்தும் நோக்கில், விரைவாகவும் அதிக எண்ணிக்கையிலும் சரக்கு ரயில்களை இயக்க வேண்டியுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று ஒரு நாள் மட்டும் 42 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டதற்கு பொதுமக்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதிலாக நாள்தோறும், 400 ரயில்கள் மூலம் அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதற்கு, மாநிலங்களில் மின்வெட்டு ஏற்படாமல் தடுப்பதற்கு பயணிகள் ரயில்களை ரத்து செய்வதை தவிர வேறு வழி தெரியவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 670 பயணிகள் ரயில் சேவையை இந்தியன் ரயில்வே ரத்து செய்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
