''காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழக விவசாயிகளுக்கு எதிராக, மத்திய அரசு செயல்படவில்லை,'' என, மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய அவசியமில்லை' என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால்,மத்திய அரசுக்கு எதிராக, தமிழக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், காவிரியில் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய தண்ணீரை, கர்நாடகாவிடம் இருந்து மத்திய அரசு பெற்று தரவில்லை என்றும், தமிழக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கூறியதாவது.
தேசத்தின் வளர்ச்சியில், தமிழகத்தின் பங்களிப்பு மிகப் பெரியது. விவசாயம், தோட்டக் கலை, மீன்வளம் உள்ளிட்டவற்றில், தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகத்தின் நலனுக்கு எதிராக, மத்திய அரசு செயல்படவில்லை. கனவிலும் அப்படி ஒன்றை நினைத்து பார்க்கவில்லை. காவிரி பிரச்சனையில், தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாக கூறுவது தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.
