பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டும் விவகாரத்தில் முடிவு ஏதும் எடுக்கமுடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டி வருவதால் அதன் நீரோட்டம் பாதிக்கப்பட்டு,தமிழகத்திற்கான நீர்வரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அப்போது இருதரப்பும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில் இரு மாநில அதிகாரிகள் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் இருத்தரப்பினரும் அவர்களது கோரிக்கைகளில் வலுவாக இருந்ததால் முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில் ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்.பி. வேணுகோபால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார். அதில், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் இந்த விவகாரத்தில் முடிவு ஏதும் எடுக்கமுடியாது என தெரிவித்துள்ளார்.