உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக விளங்குவது இந்தியாவின் ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹால். முகலாய மன்னர் ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய தாஜ்மஹால் நூற்றாண்டுகள் பல கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து தாஜ்மஹாலை பார்த்து செல்கின்றனர். வெளிநாட்டினர் பலர் தாஜ்மஹாலை பார்ப்பதற்காகவே இந்தியா வருகின்றனர். காதல் ஜோடிகள் தான் அதிகளவில் தாஜ்மஹாலில் காணப்படுகின்றனர். உலகிற்கே காதல் சின்னமாக தாஜ்மஹால் விளங்கி வருகிறது என்றால் அது மிகையாகாது.

தற்போது தாஜ்மஹாலை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வந்து பார்வையிட்டு செல்லும் நிலையில் தாஜ்மஹாலை இரவு நேரத்திலும் திறந்து வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.இதன்படி மாலை 6 மணிக்கு மேல் இரவு வரையிலும் தாஜ் மஹால் திறக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அப்படி திறக்கப்பட்டால் அதிக சுற்றுலாப் பயணிகள் தினமும் தாஜ்மஹாலை பார்வையிட முடியும்.

இதுகுறித்து கூறிய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ப்ரகலாத் படேல்  மாலை நேரத்திற்கு பிறகு இரவிலும் தாஜ்மஹாலை திறப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறினார். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.