விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள தேசிய மக்கள் தொகை  பதிவேடு திட்டத்திற்காக சுமார் 8500 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார் .  திருத்தப்பட்ட குடியுரிமை  சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது .  அதே நேரத்தில் இந்தியாவில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள வெளிநாட்டவர்களை அடையாளம் காணும் வகையில் ,  மக்கள் தொகை பதிவேடு திட்டம் அமலுக்கு வரவுள்ளது அதன்மூலம் வெளிநாட்டவர்களை கண்டறிந்து இந்திய குடியுரிமை இல்லாதவர்களை தடுப்பு  முகாம்களில் தடுத்து வைக்கவும் ,  நாடு கடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன .

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது ,  அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளரிடம் விளக்கியுள்ளார் , அப்போது தெரிவித்த  அவர் விரைவில் அமல்படுத்த உள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்திற்காக மத்திய அரசு சுமார் 8,500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது எனக் கூறினார் ,  அதே நேரத்தில் மக்கள் தொகை  கணக்கெடுப்பு மற்றும் பதிவேடு  திட்டம் குறித்து தவறாக பரப்பப்படும் தகவல்களை நம்பி  மக்கள்  அச்சப்பட வேண்டாம்  என அவர் கேட்டுக்கொண்டார்.

 

அதே போல்,  நாட்டின் முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தளபதி என்ற பொறுப்பை உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது ,  பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் ராணுவம் விவகாரம் என்ற தனித்துறை உருவாக்கப்படவுள்ளது . முப்படைகளுக்குமான தலைமை தளபதி இந்திய ராணுவ விவகாரம் என்ற தனித் துறைக்கான தலைவராக செயல்படுவார் என அவர் அப்போது தெரிவித்தார்.