காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த 6 ஆம் தேதியன்று ரத்து செய்து யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. அதற்கான நடவடிக்கையும் துரிதமாக எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் காஷ்மீரில் வாழும் மக்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

100% ஆதார் அட்டை திட்டம் காஷ்மீரில் கொண்டுவந்தால் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த முடியும் என மத்திய அரசு நம்புகிறது. அதன்படி பார்த்தோமேயானால் தற்போது காஷ்மீரில் 78 சதவீதம் பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு ஆதார் அட்டை வழங்கும் பணி முழுமையாக மேற்கொள்ளப்படும் என்றும் 100% கண்டிப்பாக ஆதார் அட்டை அனைவருக்கும் கொடுத்து மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் காஷ்மீரில் வாழும் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் முழு வீச்சாக செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு 22 நாட்களாகியும் இன்றளவும் ஒரு குறிப்பிட்ட சில இடங்களில் பதற்றம் நிலவுகிறது. இன்றளவும் ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து வைத்து இருப்பதாகவும் மருந்து கடைகள் மற்றும் மளிகை கடைகள் திறந்து வைத்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. வாகன போக்குவரத்து முழுமையாக இயங்கவில்லை என்றும் பல முக்கிய சாலைகளில் கூட குறைந்த அளவிலான வாகனங்களே இயங்குகின்றது எனவும் தெரியவந்துள்ளது