இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை ராணுவத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக இந்திய விமான படை அறிவித்துள்ள நிலையில் பிரதமர், குடியரசு தலைவர், அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

கோவை சூலூர் விமான படை தளத்தில் இருந்து குன்னூர் இராணுவ பயிற்சி மையத்திற்கு இன்று நண்பகல் முப்படை தலைமை தளபதி, அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் ராணுவ ஹெலிகாப்டர் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தலைமை ராணுவத் தளபதி பிபின் ராவத் நிலைமை என்னவென்று தேசமே எதிர்பார்த்து வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக இந்திய விமான படை அறிவித்துள்ளது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹெலிகாப்டர் காட்டேரி மலைபாதையில் சென்ற போது விபத்தானது நேரிட்டு உள்ளது. மேலும் விபத்திற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று விமானப்படை தெரிவித்துள்ளது. 

இதனிடையே முப்படை ராணுவ தலைமை தளபதி, அவரது மனைவி மற்றும் 11 இராணுவ வீரர் விபத்தில் வீரமரணம் அடைந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர், குடியரசு தலைவர் உள்ளிட்டோர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறந்த ராணுவ வீரர். ஒரு உண்மையான தேசபக்தரான அவர், நமது ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு படைகளை நவீனமயமாக்குவதில் பெரிதும் பங்களித்தார். அவரது மறைவு என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியான அவர், பாதுகாப்பு சீர்திருத்தங்கள் உட்பட ஆயுதப் படைகள் தொடர்பான பல்வேறு அம்சங்களில் பணியாற்றியுள்ளார் என்றும் அவரது சிறந்த சேவையை இந்தியா என்றும் மறக்காது என்று நினைவுகூர்ந்துள்ளார்.

Scroll to load tweet…

குடியரசுதலைவர் ராம்நாத்கோவிந்த், ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய தேசம் தனது துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. தாய்நாட்டிற்கான அவரது தன்னலமற்ற சேவை அவரது வீரத்தால் குறிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். முன்னதாக ஜனாதிபதியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. 

Scroll to load tweet…

மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழகத்தில் இன்று நடந்த மிகவும் துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப் படை வீரர்களின் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் நமது ராணுவத்துக்கும் நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று வேதனை தெரிவித்துள்ளார். வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில், தேசத்திற்கு இன்று மிகவும் சோகமான நாள் . நாட்டின் முப்படை ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஜியை மிகவும் துயரமான விபத்தில் இழந்துள்ளதோம். தாய்நாட்டிற்கு மிகுந்த அர்பணிப்புடன் சேவையாற்றிய துணிச்சலான வீரர். அவரது முன்மாதிரியான பங்களிப்புகள் மற்றும் தியாகங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தனது அனுதாபங்களை குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மத்திய வெளியுறவுதுறை அமைச்சர், ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களாக நாங்கள் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளோம் என்று குறிப்பிட்ட அவர், ஜெனரல் மறைவு நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு என்று பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் நிற்கிறோம். விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது இரங்கல் என்று கூறியுள்ளார். மேலும் இந்த துயரத்தில் இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்

Scroll to load tweet…

மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுத படை வீரர்கள் ஆகியோருக்கு பொதுமக்கள், தலைவர்கள், இராணுவ வீரர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.