கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதவந்த மாணவியின் உள்ளாடையை அகற்றுமாறு கண்காணிப்பாளர் உத்தரவிட்டது அவர்களது  தனிப்பட்ட ஆர்வமிகுதியின் விளைவு என தேர்வை நடத்திய சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வு  நடைபெற்றது. இந்தத் தேர்வை நடத்திய சிபிஎஸ்இ முறைகேடுகளை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரியரம் மையத்தில் தேர்வு எழுத வந்த ஒரு மாணவியிடம் மேல் உள்ளாடையை கழட்டுமாறு தேர்வு கூட கண்காணிப்பாளர் கூறியுள்ளார். 

அம்மாணவி தனது உள்ளாடயை தனது தாயாரிடத்தில் கொடுத்த பிறகே அவரை தேர்வு எழுத கண்காணிப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் , சிபிஎஸ்இ வாரியம் செய்தித் தொடர்பாளர் ராமா ஷர்மா இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் நீட் தேர்வின்போது நடத்த இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும்  இது யாரோ சில கண்காணிப்பாளர்களின் தனிப்பட்ட ஆர்வமிகுதியின் காரணமாக ஏற்பட்ட விளைவு என்றும் தெரிவித்தார்.

தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது வருத்தத்தக்கது என்றும் கூறினார்.

அதே நேரத்தில் தேசிய அளவிலான தேர்வுகளுக்கு நுழைவதற்கு முன்னர் எடுக்கப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து இணையதளங்கள், மின்னஞ்சல்கள், எஸ்எம்எஸ் மூலம் தேர்வு எழுத வருபவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது எனறும் அவர் தெரிவித்தார்.