கார்த்தி சிதம்பரத்துக்கு குடைச்சல் கொடுக்கும்  சிபிஐ….நேரில் ஆஜாக உத்தரவு…. ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கு சி.பி.ஐ.சம்மன் அனுப்பியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுத் தர உதவியதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது சிபிஐ வழக்கு தொடுத்துள்ளது.

இது தொடர்பாக கார்த்திக் சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட  பல இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது

ரூ. 305 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு முதலீட்டை ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக பெற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி ஐஎன்எக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி, கார்த்தி, அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் நிறுவன இயக்குநர் பத்மா விஸ்வநாதன் உள்ளிட்டோர் மீதும் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூன் 27,28 ஆகிய தேதிகளில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பிய போதும் கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை. கூடுதலான அவகாசம் கோரி கார்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தொடர்பாக நாளை விசாரணைக்கு ஆஜராக கார்த்தி சிதம்பரத்திற்கு சி.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது.