விசாரணை விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாக கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள சி.பி.ஐ இயக்குனரான அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி விவகாரங்களில் அரசுகள் தலையிடுவது பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அந்த வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா கூறியுள்ளது மோதலை பகிரங்கப்படுத்தியுள்ளது. 

சி.பி.ஐ மற்றும் ரிசர்வ் வங்கி என இரண்டுமே தன்னாட்சி அதிகாரம் கொண்டவை. அதாவது தனிப்பட்ட முறையில் அந்த அமைப்புகளின் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்களால் முடிவுகளை எடுத்து செயல்படுத்த முடியும். பிரதமராக இருந்தாலும் கூட சி.பி.ஐ மற்றும் ரிசர்வ் வங்கி செயல்பாடுகளில் தலையிட வரம்பு இருக்கிறது. இந்த வரம்பைத்தான் மத்திய அரசு மீறி வருவதாக சி.பி.ஐ கூறியிருந்தது. தற்போது ரிசர்வ் வங்கி கூறுகிறது.

 

கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா கூறிய சில கருத்துகள் தான் மத்திய அரசு – ரிசர்வ்  வங்கி இடையே மோதல் மூண்டிருப்பதை தெரியப்படுத்தியது. ஏனென்றால் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருப்பர் உர்ஜித் பட்டேல். குஜராத்காரர். மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். அப்படி இருந்தும் மோடி அரசுடன் – ரிசர்வ் வங்கி முறிக்கிக் கொண்டு செல்வதற்கான காரணம் சில முக்கியமான முடிவுகளை எடுக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்ததே காரணம் என்று சொல்லப்படுகிறது.

 

அதாவது, ரிசர்வ் வங்கியின் சட்டத்தில் செக்சன் ஏழு என்கிற விதி ஒன்று உள்ளது. இந்த விதிக்கு உட்பட்டு மத்திய அரசு கொடுக்கும் அறிவுறுத்தல்களை ரிசர்வ் வங்கி பின்பற்றியே ஆக வேண்டும். ஆனால் இந்த செக்சன் 7 என்கிற விதியை இதுவரை எந்த அரசும் ரிசர்வ் வங்கியிடம் பயன்படுத்தியதே இல்லை. ஆனால் தற்போதைய மோடி அரசு இந்த செக்சன் 7 விதியை பயன்படுத்தி ரிசர்வ் வங்கி சில முடிவுகளை எடுக்குமாறு அறிவுறுத்தியது. 

பண்டிகை காலம் மற்றும் தேர்தல்கள் நெருங்குவதால் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விதத்தில் நலிவடைந்த வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்கவும், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் எளிதில் கடன் பெறவும் வழிவகை செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு செக்சன் 7 சட்ட விதிப்படி மத்திய நிதி அமைச்சகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. செக்சன் 7 என்கிற விதி பயன்படுத்தப்பட்டுள்ளதால் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை ரிசர்வ் வங்கி ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் மத்திய அரசு கூறியபடி செயல்பட்டால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

  

இதனை மனதில் வைத்தே ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கடந்த வாரம்  அரசுகள் தங்கள் செயல்பாட்டில் தலையிட்டால் பேரழிவுகள் ஏற்படும் என்று கூறியிருந்தார். இதற்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அன்றைய தினமே பதிலடி கொடுத்தார். அதாவது வங்கிகளில் தற்போது வாரக்கடன் குவிந்துள்ளதற்கு காரணம் ரிசர்வ் வங்கியின் செயல்பாடு தான் என்று அவர்.

முதல்முறையாக மோடி அரசில் ரிசர்வ் வங்கி – நிதி அமைச்சகம் இடையே மோதல் மூண்டது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவி விலக உள்ளதாக கூட தகவல்கள் வெளியாகின. இதனால் சுதாரித்துக் கொண்ட மத்திய நிதிஅமைச்சகம் பிரச்சனைக்கு தீர்வு காண இறங்கி வந்தது. உடனடியாக அறிக்கை ஒன்றும் நிதி அமைச்சகத்திடம் இருந்து வந்தது. 

அதாவது, மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசும், ரிசர்வ வங்கியும் பரஸ்பரம் பல்வேறு விவகாரங்களை அவ்வப்போது ஆலோசித்து முடிவு எடுத்து வரும் நிலையில், மத்திய அரசு ஒருபோதும் பொதுவெளியில் அந்த விவகாரங்களை விவாதித்ததில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் கூட மத்திய அரசின் மீதான ரிசர்வ் வங்கியின் அதிருப்தி நீடிப்பதாகவே சொல்லப்படுகிறது.