அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது என்பது நம்பிக்கையில் அடிப்படையில் அமைந்த விஷயம். இதற்காக நான் சிறை செல்லவும்,தூக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன் என்று மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தை சந்திக்க நேற்று மத்திய அமைச்சர் உமா பாரதி லக்னோ வந்திருந்தார். அவரைச் சந்தித்தபின், நிருபர்களுக்கு உமா பாரதி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

சிறை செல்லத் தயார்

என்னைப் பொருத்தவரை ராமர் கோயில் என்பது, நம்பிக்கை சார்ந்த விஷயம். ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நான் சிறை செல்ல வேண்டும் என்றாலும், அல்லது நான் தூக்கில் தொங்க வேண்டும் என்றாலும் நான் தயார்.

நான் உ.பி முதல்வர் ஆதித்யநாத்துடன் நடத்திய பேச்சில் ராமர் கோயில் தொடர்பான  எந்த விஷயம் இடம் பெறவில்லை. அது குறித்து நாங்கள் பேசவில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் ஒன்றும் புதிதாக பேசத் தேவையில்லை. யோகி ஆதித்யநாத்தின் குருநாதர் மகந்த் அவைத்தியநாத், ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற இயக்கத்தை நடத்தியவர்.

அதிகம் பேசவில்லை

இந்த விஷயம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதிகமாக இந்த விஷயத்தை குறிப்பிட்டு பேச வேண்டாம் என நினைக்கிறேன். அதேசமயம், ராமர் கோயில் இடம் தொடர்பான பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியேதான் பேசித் தீர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.