இமாச்சல பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44-ஆக அதிகரித்துள்ளது. 

இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தின் பஞ்ஜார் பகுதியிலிருந்து 60-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கடகுஷானி என்ற இடத்திற்கு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. பஞ்ஜார் பகுதியில் உள்ள மலைப்பாங்கான கோர்ச் என்ற பகுதியை நெருங்கும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தாக முதற்கட்ட தகவல் வெளியானது. இது தொடர்பாக, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44-ஆக அதிகரித்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 34 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பயணிகளை அதிகம் ஏற்றிச்சென்றதே பேருந்து விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

 

இதற்கிடையே, பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் இரங்கல் தெரிவித்தனர். மேலும் விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்த இமாச்சல பிரதேச முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.