Satyagraha protest : Karti's dig on BJP over heavy deployment near Congress HQ
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் அங்கமான அசோசியடெட் ஜர்னல் நிறுவனத்தின் ரூ. 2 ஆயிரம் கோடி சொத்துக்களை சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இயக்குனர்களாக இருக்கும் யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறது. வழக்கின் விசாரணைக்காக ஆஜராக கூறி காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியண்கா காந்தி ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி அமலாக்கத் துறை விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜரானார்.
நாடு முழுக்க போராட்டம்:
ராகுல் காந்தியிடம் மத்திய அமலாக்கத் துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்றன. இது மட்டும் இன்றி டெல்லி அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டனர். இதில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த போராட்டத்துக்கு முன் டெல்லியை அடுத்த அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் நோக்கி காங்கிரஸ் கட்சியிர் பேரணி செல்ல திட்டமிட்டனர். இதை அடுத்து பேரணிக்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் எவ்வித அசம்பாவிதத்தையும் தடுக்கும் நோக்கில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் பேரிகார்டுகள் போடப்பட்டன.
புல்டோசர்களை காணவில்லையே:
இது குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்தி சிதம்பரம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில், “இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகம் செல்லும் வழியில் பேரிகார்டு மற்றும் போலீசாரை மட்டுமே பா.ஜ.க. வைத்து இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புல்டோசர்களை காணவில்லையே. அவை அனைத்தும் சிறுபான்மையினரின் வீடு மற்றும் வாழ்க்கை இடிக்கு சென்று இருக்கலாம்,” என குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னதாக ஜூன் 10 ஆம் தேதி நடைபெற்ற வன்முறையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜாவத் அகமது வீடு நேற்று புல்டோசர்களால் இடிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், கார்த்தி சிதம்பரம் இவ்வாறு ட்வீட் செய்து இருக்கிறார்.
