ரெயில் பயணத்தில் மூத்த குடிமக்கள், அர்ஜூனா விருது பெற்றவர்கள், உள்ளிட்ட பல பிரிவினர் டிக்கெட் கட்டண சலுகை பெற ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட்டில்வெளியாகலாம்.

2917-18ம் நிதியாண்டு முதல் ரெயில்வே துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல், பொது பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில், ரெயில்வே துறையின் வருவாயை பெருக்கவும், பயணிகளுக்கு பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும் பல புதிய திட்டங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. அதே சமயம், பயணிகள் கட்டணத்திலும் சிறிய அளவு உயர்வு இருக்கலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ரெயிலில் பயணிப்பவர்களில் 50 வகையான பிரிவினருக்கு கட்டணத்தில் ரெயில்வே துறை சலுகை அளித்து வருகிறது. அதில் மூத்த குடிமக்கள், ஆராய்ச்சி மாணவர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், நோயாளிகள், செவிலியர்கள், விளையாட்டு வீரர்கள், அரசு விருது பெற்றவர்கள், வேலையில்லாத பட்டதாரிகள், பத்திரிகையாளர்கள் என பல பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

இப்போது சோதனை அடிப்படையில் மூத்த குடிமக்கள் மட்டும் ரெயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகை பெற ஆதார் அடையாள அட்டை காண்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. மற்றவர்கள் வேறு அடையாள அட்டை காண்பிக்க வேண்டும். இந்நிலையில், நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 100 கோடி பேர் வரை ஆதார் அடையாள அட்டை பெற்றுவிட்டதால், டிக்கெட் கட்டண சலுகை பெறுபவர்கள் எளிதாக கண்டுபிடிக்க ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட உள்ளது.

அரசின் சலுகைகள் தவறாக பயன்படுத்தப் படக்கூடாது, சரியான பயணாளிகளுக்கு மட்டுமே சலுகைகள் சேர வேண்டும் என்ற நோக்கில் வரும் பட்ஜெட்டில் டிக்கெட் கட்டண சலுகை பெறும் பிரிவினர் கண்டிப்பாக ஆதார் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.