பட்ஜெட் தாக்கலைப் அ.தி.மு.க., மூத்தத் தலைவரும் மக்களவை சபாநாயகருமான தம்பிதுரை புறக்கணித்ததாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் தினத்திலும் பட்ஜெட் கூட்டத் தொடரும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இதைப் பெரும்பாலும் எந்தத் தலைவர்களும் தவறவிடமாட்டார்கள். ஆனால். மக்களவை துணை சபாநாயகர் என்ற மிகப் பெரிய பொறுப்பில் உள்ள அதிமுகவின் தம்பிதுரை நேற்றைய பட்ஜெட் தாக்கலின்போது அவையில் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட் உரையை தற்காலிக நிதி அமைச்சர் பியுஷ் கோயல், வாசிக்கத் தொடங்கிய பிறகுதான், தம்பிதுரை இருக்கையில் இல்லை என்பது தெரியவந்தது.

முக்கியமான பட்ஜெட் தாக்கலை புறக்கணித்துவிட்டு தம்பிதுரை பெங்களூரு சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. பட்ஜெட் தாக்கலை ஏன் தம்பிதுரை புறக்கணித்தார் என்பது பற்றி அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. என்றாலும், பாஜக கூட்டணிக்கு தம்பிதுரை முட்டுக்கட்டை போட்டுகொண்டிருந்தாலும், கொங்கு மண்டல அமைச்சர்கள் மூலமாக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. இதில் தம்பிதுரை அதிருப்தி அடைந்திருக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பாஜகவை தோளில் தூக்கி சுமக்க அதிமுக என்ன பாவம் செய்தது என்ற கருத்து தெரிவித்தது முதல் ரபேல் விவகாரம், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என அனைத்து விவகாரத்திலும் பாஜகவை கடுமையாக விமர்சித்துவருகிறார் தம்பிதுரை. இந்நிலையில்  தம்பிதுரையின் பட்ஜெட் புறக்கணிப்பால் டெல்லியில் மட்டுமல்ல அதிமுக வட்டாரத்திலும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.