மக்களவைத் தேர்தலுக்கு பிறகு இந்தியாவை எப்படி வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்து செல்லப்போகிறோம் என்பதற்காக ஒரு முன்னோட்ட ட்ரெய்லர்தான் இந்த இடைக்கால பட்ஜெட் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், "இந்த பட்ஜெட்டால் ஏறக்குறைய 15 கோடி குடும்பங்கள், அரசின் திட்டங்களால் பயன்பெறுவார்கள். விவசாயிகள், நடுத்தர குடும்பத்தினருக்கு நிவாரணத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரிச்சுமையில் இருந்து விடுபட்டுள்ள நடுத்தர குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்.

12 கோடி விவசாயிகள், 3 கோடி ஊதியம் வாங்கும் பிரிவினர் அவர்களின் குடும்பத்தினர், அமைப்புசாரா துறையில் பணியாற்றும் 40 கோடி தொழிலாளர்கள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களால் பயன்பெறுவார்கள். ஏராளமான மக்கள் ஏழ்மையில் இருந்து நீக்கப்பட்டது நல்ல விஷயம். புதிய நடுத்தர வர்த்தகத்தினர் கனவுகளுடன் உருவாகிறார்கள்.

மக்களவைத் தேர்தலுக்கு பின் நாட்டை எவ்வாறு வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லப்போகிறோம் என்பதற்கான சிறிய ட்ரெய்லர்தான் இந்த இடைக்கால பட்ஜெட். தேர்தலுக்கு பிறகு பாஜகவின் ஆட்சியில் மேலும் பல திட்டங்களை முன்னெடுத்து நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வோம். சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் பட்ஜெட் அதிகாரத்தை அளித்துள்ளது. புதிய இந்தியா எனும் இலக்கை நோக்கிச்செல்ல ஊக்கத்தை அளிக்கிறது" என அவர் தெரிவித்தார்.