இடைக்கால பட்ஜெட்டில் 2 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவியளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் நிதித்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக, 2 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி தரப்படும். இது 3 தவணைகளாக 2 ஆயிரம் வீதம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். விவசாயிகளுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கடன்களுக்கு 3% வரை வட்டி மானியம் வழங்கப்படும். 

விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவதன் மூலம் ரூ.75,000 கோடி செலவாகும். பொருளாதார நலிந்த பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கல்வி நிறுவனங்களில் இடங்கள் அதிகரிக்கப்படும். இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை வரும் மார்ச் மாதத்திற்குள் உருவாகும். விவசாயிகளின் வருமானம் 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப்படும். இதுவரை எந்த ஆட்சிக்காலத்திலும் இல்லாத வகையில் 5 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது.

1.5 கோடி வீடுகள், பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை, மார்ச் மாதத்துக்குள் உருவாகும். கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன என்பதுடன், வங்கித் துறையில் செய்யப்பட்ட மாற்றங்கள் பலனைத் தரத் தொடங்கியுள்ளன’’ என அறிவிக்கப்பட்டுள்ளது.