தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. தனது ஊழியர்களுக்கு சம்பளம் போடவே படாதபாடு பட்டு வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனியாருக்கு விற்கப்படுமோ என்ற அச்சம் நிலவியது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனியாருக்கு விற்கப்படாது என மத்திய அரசு அறிவித்தது. மேலும் அந்நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையில் களம் இறங்கியது.

அதன் ஒரு பகுதியாக விருப்ப ஓய்வு திட்டத்தை (வி.ஆர்.எஸ்.) கொண்டு வந்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சுமார் 1.6 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பாதி பேருக்கு மேல் வி.ஆர்.எஸ். கேட்டுள்ளதாக தகவல். இந்நிலையில், விருப்ப ஓய்வு திட்டத்தை தேர்ந்தெடுக்குமாறு தொழிலாளர்களை நிர்வாகம் வற்புறுத்துவதாக பி.எஸ்.என்.எல். தொழிலாளர்கள் சங்கங்கள் குற்றஞ்சாட்டி உள்ளன. மேலும் இதனை கண்டித்து இன்று நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

இது குறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அனைத்து இந்திய யூனியன்கள் மற்றும் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி அபிமன்யு இது குறித்து கூறுகையில், நாங்கள் வி.ஆர்.எஸ். திட்டத்தை எதிர்க்கவில்லை. தங்களுக்கு ஆதாயம் என்று கருதுபவர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். ஆனால் இந்த திட்டம் கடைமட்ட தொழிலாளர்களுக்கு ஆதாயம் கிடையாது. 

விருப்ப ஓய்வு திட்டத்தை தேர்ந்தெடுக்குமாறு அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். அதுதவிர ஓய்வு வயதை 58ஆக குறைக்கப்படும் என கூறுகிறார்கள். இது கட்டாய ஓய்வு திட்டம். அதனால் நாங்கள் திங்கட்கிழமையன்று (இன்று) உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தார். பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால் தொலைத்தொடர்பு சேவை பாதிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.