சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்‌ஷாபந்தன் நாளன்று சகோதரிகளுக்கு பணம், நகைகள் பரிசளிப்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், உத்தரப்பிரதேசம் அமேதி நகரில், பெண்களுக்கு அவர்களின் சகோதரர்கள் கழிப்பறையை பரிசாக அளிக்கிறார்கள்.

அமேதியில் உள்ள பெண்களின் வீடுகளில் கழிப்பறை இல்லாததால், அதை கட்டிக்கொடுக்கும் வகையில், அவர்களின் சகோதரர்கள் இதை பரிசாக அளிக்கிறார்ள்.

திறந்த வௌிக்கழிப்பிடத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மத்திய அரசு தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறது. இதை வலியுறுத்தும் வகையில், உத்தரப்பிரதேசம் அமேதி மாவட்டத்தில், ‘ஜில்லா ஸ்வச்சாத்தா சமிதி’(சுகாதாரத்துக்கான மாவட்ட குழு)புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி, அமேதி மாவட்டத்தில் கழிப்பறை வசதி இல்லாத பெண்களுக்கு ரக்‌ஷாபந்தன் பரிசாக அவர்களின் சகோதரர்கள் கழிப்பறை கட்டிக்கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்து உள்ளது.

இது குறித்து அமேதி மாவட்டத்தின் தலைமை மேம்பாட்டு அதிகாரி  அபூர்வா துபே கூறுகையில், “ ரக்‌ஷா பந்தன் பரிசாக இங்குள்ள பெண்களுக்கு அவர்களின் சகோதரர்கள் கழிப்பறை கட்டிக்கொடுத்து அதை பரிசாக அளிக்க வரும்புகிறார்கள். இதற்காக 854 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த கழிப்பறையை அந்த பெண்களுக்கு அவர்களின் சகோதரர்களே சொந்த செலவில் கட்டுகிறார்கள். அதற்கான தொகையை அரசிடம் செலுத்தவிட வேண்டும். மாவட்ட நிர்வாகம் கழிப்பறையை கட்டிக்கொடுத்துவிடும். இந்த திட்டத்தில் முன்பதிவு செய்து பணம் செலுத்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு அளிக்கப்படும். முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும்.

கழிப்பறை கட்டி முடிக்கப்பட்ட பின், அதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து, அதற்குரிய பரிசுகளை வழங்கும் இந்த கண்காணிப்பு குழுவில் மாவட்ட கலெக்டர், மாவட்ட வளர்ச்சி அதிகாரி உள்ளிட்டோர் இருப்பார்கள் ’’ என்றார்.