நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த எனது ஆத்மா சாந்தி அடைய வேண்டுமானால், 50 பாகிஸ்தானிய வீரர்களின் தலையை வெட்டிக் கொண்டுவர வேண்டும் என்று பாகிஸ்தானிய வீரர்களால் தலை வெட்டி கொல்லப்பட்ட இந்திய வீரரின் மகள் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கிருஷ்ண காட் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்புபடையினர் மீது பாகிஸ்தான்ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர்.

இதில் ராணுவர் வீரர் பிரகாத் சிங், பி.எஸ்.எப். கான்ஸ்டபிள் பிரேம் சாகர் ஆகியோரை கொலை செய்தபின், அவர்களின் தலையை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வெட்டி எடுத்துச்சென்றனர். இந்த கொடூர, மனிதநேயமற்ற சம்பவம் பெரிய அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பி.எஸ்.எப். கான்ஸ்டபிள் பிரேம்சாகரி்ன் மகள் சரோஜ் இன்று கண்ணீருடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ என் தந்தையின் உயிர் தியாகம், வீர மரணம் நிச்சயமாக யாரும் மறக்கமாட்டார்கள். அவரின் ஆத்மா சாந்தி அடைய எங்களுக்கு பாகிஸ்தானிய வீரர்களின் 50 பேரின் தலை வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரேம் சாகரின் சகோதரர் தயாசங்கர் கூறுகையில், “ எனது சகோதரரின் வீரமரணத்தை நினைத்து பெருமை கொள்கிறேன். ஆனால், இந்த மரணம் என்பது இதயத்தை நொறுங்கச் செய்யக்கூடியது. பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் கொடூரமாக மனிதநேயமற்ற முறையில் நடந்துவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்.