7 ஆண்டுகளுக்கு முன் மனக்கசப்பால் பிரிந்து வாழ்ந்த பெற்றோரை சேர்த்து வைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்து 10 வயது சிறுவன் எழுதிய கடிதம், நீதிபதிகளை நெகிழவைத்தது.

குடும்ப நல நீதிமன்றங்களில் தீர்க்க முடியாமல் உச்சநீதிமன்றம் வரை வந்த 23 வழக்குகள், 7 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன. இவற்றுக்கு தீர்வு காணும் முயற்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், மோகன் எம். சந்தானகவுடர் ஈடுபட்டனர். வழக்குகளில் தொடர்புடைய தம்பதிகளை அமரவைத்து அறிவுரை கூறி வழக்கை தீர்த்து வைத்தனர்.

அப்போது, திடீரென ஒரு 10 வயது சிறுவன் கையில் சிறிய வாழ்த்து மடலைக் கொண்டு வந்து நீதிபதிகள் இருவரிடமும் அளித்தான். அந்த வாழ்த்து மடலைப் படித்த நீதிபதிகள் கண்ணீர் விடாத குறையாக அந்த சிறுவனை கட்டி அணைத்தனர்.  

தன் கைப்பட அந்த சிறுவன் எழுதிய கடிதத்தில், கடவுள் எப்போதும் உனக்கு ஏதாவது கொடுத்திருப்பார். ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வுக்கான ஒரு சாவி இருக்கும். ஒவ்வொரு வெளிச்சத்துக்கும் ஒரு நிழல் இருக்கும். ஒவ்வொரு கவலைக்கும், துயரத்துக்கும் விடிவுகாலம் இருக்கும். ஒவ்வொரு விடியும் பொழுதுக்கும் ஒரு திட்டமிடல் நமக்காக இருக்கும். எனது பெற்றோரை சேர்த்து வைத்த உங்களுக்கு நன்றி என்று எழுதியிருந்தான்.

விவகாரத்து வாங்கி பிரிந்து செல்லும் பெற்றோரின் பிரிவால், குழந்தைகள் எந்த அளவிற்கு மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை, இந்த சிறுவன் கடிதத்தில் எழுதியிருக்கும் வார்த்தைகளிலிருந்து வெளிப்படுகிறது.