ஜம்மு, அக். 22-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் அளித்த பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் பலியானார்கள். தீவிரவாதி ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடவடிக்கைக்குப்பின், பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீர் எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
கதுவா மாவட்டத்தில் ரஜோரியில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் நேற்று அத்து மீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.இந்தப் பகுதியில்தான் நேற்று முன்தினம் பெரிய அளவிலான ஊடுருவல் முயற்சியை நமது எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்து இருந்தனர்.
ரஜோரி பிரிவில் நேற்று நடந்த இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் வலுவான பதிலடி கொடுத்தனர். ஹிராநகர் பிரிவில் போபியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள்.
நமது எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், தங்கள் நிலையில் இருந்து திருப்பித் தாக்கினார்கள். ஏறத்தாழ 15 நிமிடங்கள் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
இந்த மோதலில், இந்திய வீரர் ஒருவர் காயம் அடைந்தார். இந்திய ராணுவத்தின் வலுவான பதிலடி நடவடிக்கையில் பாகிஸ்தான் தரப்பு வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலின்போது தீவிரவாதி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்தார்.
இந்திய ராணுவத்தின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடவடிக்கைக்குப்பின் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட 31-வது போர் நிறுத்த ஒப்பந்த மீறல் இதுவாகும். இந்த பகுதியில் கடந்த 4 நாட்களாக இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் பகுதியில்
4 நாட்களில் மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் 5 முறை போர் நிறுத்த ஒப்பந்த்தை மீறி உள்ளனர்.
இதற்கிடையில் பஞ்சாப் மாகாணத்தின் ஷாகர்கர் பிரிவு எல்லைப் பகுதியிலும், நேற்று இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக, பாகிஸ்தான் ராணுவம் அறிவித்து உள்ளது.
