சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சி 10 மற்றும் 12-ம்வகுப்புத் தேர்வுகள் நேரடியாக நடத்துவதற்கு எதிராகத் தொடரப்பட்ட மனுமீது உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை நடத்துகிறது.
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சி 10 மற்றும் 12-ம்வகுப்புத் தேர்வுகள் நேரடியாக நடத்துவதற்கு எதிராகத் தொடரப்பட்ட மனுமீது உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை நடத்த உள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதிலிருந்து சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக பொதுத்தேர்வுகள் ஏதும் நடக்கவில்லை. அனைத்தும் ஆன்-லைன் மூலமே நடக்கின்றன. மேலும், மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுதுவதை கடந்த ஆண்டு ரத்து செய்த உச்ச நீதிமன்றம் மதிப்பெண் முறைக்கு மாற்றுவழி குறித்து ஆராயுமாறு ஆலோசனை தெரிவித்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவது, 15வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தியது ஆகிய காரணங்களால் மீண்டும் நேரடியாக தேர்வு முறைக்கு சிபிஎஸ்இ தயாராகி வருகிறது. வரும் ஏப்ரல் 26ம் தேதி 10 மற்றும் 12ம்வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மாணவர்ளுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வை நேரடியாக நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சமூக ஆர்வலர் அனுபா ஸ்ரீவஸ்தவா என்பவர் வழக்கறிஞர் பிரசாந்த் பத்மநாபான் மூலம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது. மனுதாரர் வழக்கறிஞர் பிரசாந்த் நீதிபதிகள் அமர்விடம், இந்தவழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தார். அவர் வைத்த கோரிக்கையில் “ கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்திலிருந்து 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏதும் நேரடியாக நடத்தப்படவில்லை.
இப்போது பெருந்தொற்று குறைந்து சூழல் முன்னேற்றமடைந்திருந்தாலும், கொரோனா மீண்டும் பரவும் என்பதை புறந்தள்ளிவிட முடியாது. கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி, நேரடியாகத் தேர்வுகள் நடத்தப்படாமல் மாற்றுவழியில் மாணவர்களுக்கான தேர்ச்சி முறைஅறிமுகப்படுத்தப்பட்டது.

மத்தியப்பிரதேசம் உள்ளிட்டபல்வேறு மாநிலங்களில் மாணவர்களுக்கு நேரடியாக தேர்வு முறையைத் தொடங்கிவி்ட்டார்கள். சிபிஎஸ்இ வாரியமும் பொதுத்தேர்வை நேரடியாக நடத்த ஆயத்தமாகிவருகிறது. ஆதலால், விரைந்து குழு அமைத்து,12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாகத் தேர்வு வைப்பதற்குபதிலாக மாற்றுவழியில் மதிப்பெண் வழங்கும் முறையை ஆராய உத்தரவிடவேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுக்குள் தேர்வுமுடிவுகளைஅறிவித்து, அடுத்தகட்டபடிப்புக்கான சேர்க்கை தேதிதையும் குறித்த காலத்துக்குள் அறிவிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்
இதைக் கேட்ட நீதிபதி கான்வில்கர், “ சிபிஎஸ்இ வாரியத்துக்கு உங்கள் மனுவின் நகலை வழங்கிடுங்கள். நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்
