கடந்த 1994-ம் ஆண்டுக்குப்பின் இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இயல்புக்கும் அதிகமாக பெய்துள்ளதாகவும், அக்டோபர் 10-ம் தேதிக்குள் பருவமழை முடிந்துவிடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தென் மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்துவிட்டது. ஆனால், முழுமையாக விடைபெறுவது என்பது அக்டோபர் 10-ம் தேதி தான். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் காலம்வரை தென் மேற்கு பருவமழை காலம், இந்த காலத்தில் மழையளவு நீண்டகாலச் சராசரியோடு ஒப்பிடும்போது 88 செமீ மழைதான் சராசரி மழையாகும். ஆனால், இந்த முறை 110 சதவீதம் இந்த ஆண்டு பெய்துள்ளது.

கடந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்புக்கும் குறைவாகவே இருந்தது. இந்த ஆண்டும் ஜூன் மாதம் மிகவும் தாமதாகவே தென் மேற்கு பருவமழை தொடங்கி, அந்த மாதத்தில் 33 சதவீதம் பற்றாக்குறையாக முடிந்தது. ஆனால், ஜூலை மாதத்தில் 105 சதவீதம், ஆகஸ்ட் மாதத்தில் 115 சதவீதம், செப்டம்பரில் 152 சதவீதம் என நீண்டகாலச் சராசரியில் மழை வெளுத்துவாங்கியுள்ளது

ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 1996-ம் ஆண்டுக்குப்பின் இந்த ஆண்டு 115 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது, ஜூலை மாதம் 105சதவீதம் பெய்த மழை என்பது கடந்த 1917 ம் ஆண்டுக்குப்பின் பெய்த அதிகபட்சமாகும். இதுகுறித்து இந்திய வானிலைமையம் வெளியிட்ட அறிவிப்பில் “ 1994-ம் ஆண்டுக்குப்பின், தென் மேற்கு பருவமழை 2019-ம் ஆண்டில் நீண்டகாலச் சராசரியில் 110 சதவீதம் மழை பெய்துள்ளது. கடந்த 18 முதல் 19 ஆண்டுகளில் இந்தியாவின் வடகிழக்குப்பகுதிகளில் மழை நீண்டகாலச் சரியோடு ஒப்பிடும்போது குறைவாக பெய்துள்ளது. இதில் 2007ம் ஆண்டு மட்டும் விதிவிலக்கு.

கடந்த 1931-ம் ஆண்டுக்குப்பின் ஜூன் மாதத்தில் பற்றாக்குறையாக மழை இருந்து முடியும் போது இயல்புக்கும் அதிகமாக மழை இருந்தது இதுமுதல் முறை. கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்த மழை மட்டும் கடந்த 1983ம் ஆண்டுக்குபின் 142 சதவீதம் அதிகம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.