black money

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின், 2017, ஜனவரி 10-ந் தேதியில் இருந்து வருமான வரித்துறை நாடுமுழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் கருப்பு பண பதுக்கல்காரர்களிடம் இருந்து, கணக்கில் வராத ரூ.5 ஆயிரத்து 400 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

வழக்கு

நாட்டில், ஊழல், கருப்பு பணம் ஆகியவற்றை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். இந்த ரூபாய் நோட்டு தடைக்கு பின் வருமான வரித்துறையினர், அமலாக்கப் பிரிவினர், சி.பி.ஐ. ஆகிய அமைப்புகள் நடத்தி தேடுதல் வேட்டையில் பிடிபட்ட கருப்புபணம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன.

அந்த வழக்கில் பிரமாணப்பத்திரத்தை மத்திய நிதி அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

ரூபாய் நோட்டுதடை

கடந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி முதல் டிசம்பர் 30-ந் தேதி வரை ரூபாய் நோட்டு தடை காலம் அமலில் இருந்தது. இந்த காலத்தில் ஏராளமானோர் தங்களிடம் இருக்கும் செல்லாத நோட்டுகள் மூலம் தங்க, வைர நகைகளை வாங்கியது தெரியவந்தது.

ஆப்ரேஷன் கிளீன் மணி

இதன்பின் கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வர ‘ஆப்ரேஷன் கிளீன் மணி’ என்ற பெயரில் வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட்கள், செல்லாத நோட்டுகள் விவரம் ஆகியவற்றை வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு ஆகியவை ஆய்வு செய்துநடவடிக்ைகயை தொடங்கின.

1100 ரெய்டுகள்

அதன் பின் ஏறக்குறைய 1,100-க்கும் மேற்பட்ட அதிரடி சோதனைகள் நாடுமுழுவதும் பல்வேறு நபர்களிடம் நடத்தப்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்ட வழக்குகள் அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ.வசம் மாற்றப்பட்டன. 

ரூ.5,400 கோடி

இந்த சோதனையில் அதிகாரிகள் எடுத்த கடுமையாக நடவடிக்கை காரணமாக, ரூ.610 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ110 கோடி புதிய ரூ.2000 நோட்டுகளாகும். மேலும், தங்க நகைகள், தங்க கட்டிகளும் கைப்பற்றப்பட்டன. இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 5,400 கோடியாகும்.

18 லட்சம் பேர்

மத்தியஅரசு நிர்ணயித்த ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமாக வங்கிகளில் டெபாசிட்செய்தது தொடர்பாக 5,100 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. இந்த நடவடிக்கையில், வருமானவரி செலுத்தாத 18 லட்சம் பேர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதில் 12 லட்சம் பேரிடம் ஆன்-லைன் மூலம் விசாரணை நடத்தியதில் 8.38 லட்சம் பேர் தங்கள் ‘பான் கார்டு’களை அரசிடம் அளித்துள்ளனர். இதில் 3.78 லட்சம் பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

இது தொடர்பாக இன்னும் விசாரணை நடந்து வருகிறது. மேலும், ‘கரீப் கல்யான் யோஜனா’விலும் டெபாசிட் செய்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.