மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பாரதிய ஜனதா உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலங்களவையில் பாரதிய ஜனதா தனி பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது. இதனால் 65 ஆண்டுகளாக மாநிலங்களைவையில் தனி பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராக செயல்பட்டு வந்த அனில்மாதவ் தவே, கடந்த மே மாதம் திடீரென உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த இடத்திற்கு தேர்தல் நடைபெற்றது. 
இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் சம்பத்திய உய்கே, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதனைதொடர்ந்து மாநிலங்களவையில் பாரதிய ஜனதா உறுப்பினர்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்தது. இதன்மூலம் மாநிலங்களவையில் தனி பெரும் கட்சியாக பாரதிய ஜனதா உருவாகியுள்ளது. 

245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களைவையில் கடந்த 65 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தனி பெரும் கட்சியாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது 57 உறுப்பினர்களை காங்கிரஸ் கட்சி, இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

வரும் 8-ம் தேதி குஜராத் மற்றும் மேற்கு வங்காளத்தில் ஒன்பது மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குஜராத் மாநிலத்திலிருந்து பாரதிய ஜனதா இரண்டு இடத்திலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆறு இடங்களில் ஆளும் திருணாமுல் காங்கிரஸ் ஐந்து இடத்திலும், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், பாரதிய ஜனதா மாநிலங்களவையில் இனி தொடர்ந்து தனி பெரும் கட்சியாக செயல்படும் நிலை உருவாகியுள்ளது.