கர்நாடக மாநிலத்தில் நாளை தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜக வெற்றி பெற்று தான் முதலமைச்சராக பதவி ஏற்பேன் என்றும் அதற்குரிய நாளையும், இடத்தையும் முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா, நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பகிரங்கமாக தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவும், காங்கிரசும் கடுமையான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டது. நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பாஜகவின் முதலமைச்ச்ர வேட்பாளர் எடியூரப்பா, பாதாமி தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக முதலமைச்சர் சித்தராமையா எதிர்த்து போட்டியிடுகிறார்.

பாஜக வேட்பாளரான ஸ்ரீராமலுவை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, எடியூரப்பா, கர்நாடகாவில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தபின் அனைத்து இடங்களிலும் பாஜக அலை எழுந்துள்ளது என்றார்.

நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. 130 தொகுதிகளையாவது வெல்வது உறுதி என்றார். தேர்தல் முடிவுக்குப் பிறகு பாஜக எப்படிப்பட்ட பலமான கட்சி என்பதை மற்ற கட்சிகள் புரிந்து கொள்ளும் என்று பேசினார்.

வரும் 17 ஆம் தேதி அன்று பெங்களூருவில் உள்ள கண்டீரவா விளையாட்டு அரங்கில், தான் முதலமைச்சராக பதவியேற்பேன் என்றும், பிரதமர் மோடிக்கு விழாவிற்கான அழைப்பை விடுத்துள்ளேன் என்றும் கூறினார்.

அரசியல் லாபத்துக்காக லிங்காயத்து சமுதாயத்தை உடைத்த அவப்பெயர் சித்தராமையாவுக்கு கிடைத்துள்ளது. இதனை லிங்காயத்து சமுதாய மக்கள் மன்னிக்க மாட்டார்கள். சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் சித்தராமையா தோல்வி அடைவார் என்று எடியூரப்பா தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.