ராமர் கோயில் கும்பாபிஷேகம்: எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி கலந்து கொள்ளவில்லை!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் போராட்டத்தை முன்னின்று நடத்திய பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் உடல்நிலை மற்றும் வயது காரணமாக அடுத்த மாதம் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
“எங்கள் குடும்பத்தில் இருவருகே பெரியவர்கள். அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு அவர்கள் வர வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். அதனை இருவருமே ஏற்றுக் கொண்டனர்.” என ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ள கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
ஜனவரி 15 ஆம் தேதிக்குள் ஏற்பாடுகள் நிறைவடையும் என்றும், பிரான் பிரதிஷ்டைக்கான பூஜை ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள் குறித்து தெரிவித்த சம்பத் ராய், “உடல்நலம் மற்றும் வயது தொடர்பான காரணங்களால் எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. அத்வானிக்கு இப்போது 96 வயதாகிறது, ஜோஷிக்கு அடுத்த மாதம் 90 வயதாகிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து விழாவிற்கு அழைக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
ஆறு தரிசனங்களின் சங்கராச்சாரியார்கள் மற்றும் சுமார் 150 முனிவர்கள் விழாவில் பங்கேற்பார்கள் எனவும், விழாவிற்கு 4000 துறவிகள் உட்பட 2,200 விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். காசி விஸ்வநாத், வைஷ்ணோ தேவி போன்ற முக்கிய கோவில்களின் தலைவர்கள் மற்றும் மத நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
ஆன்மிக தலைவர் தலாய் லாமா, கேரளாவின் மாதா அமிர்தானந்தமயி, யோகா குரு பாபா ராம்தேவ், சினிமா நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், அருண்கோவில், திரைப்பட இயக்குனர் மதுர் பண்டார்கர் மற்றும் பிரபல தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பிரபல ஓவியர் வாசுதேவ் காமத், இஸ்ரோ இயக்குனர் நிலேஷ் தேசாய் உள்ளிட்ட பல பிரபலங்கள் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று சம்பத் ராய் கூறினார்.
காங்கிரஸின் பொது நிதி திரட்டும் திட்டம்: 6 மணி நேரத்தில் ரூ.1 கோடி வசூல்!
கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, ஜனவரி 24 முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை சடங்குகள் மரபுகளின்படி நடைபெறும். ஜனவரி 23ஆம் தேதி முதல் கோயில் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அயோத்தியில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விருந்தினர்கள் தங்குவதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர, பல்வேறு மடங்கள், கோயில்கள் என சுமார் 600 அறைகளும் உள்ளதாகவும் சம்பத் ராய் கூறினார்.
இதனிடையே, கும்பாபிஷேக விழாவிற்கான ஆயத்தங்களைத் தொடங்கிவிட்டதாக அயோத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அயோத்தி நகராட்சி ஆணையர் விஷால் சிங் கூறுகையில், பக்தர்களுக்காக ஃபைபர் கழிப்பறைகள் அமைக்கப்படும் என்றும், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உடை மாற்றும் அறைகள் அமைக்கப்படும் என்றார். ராம ஜென்மபூமி வளாகத்தில் ராமர் வாழ்க்கையின் 108 நிகழ்வுகளை காட்சிப்படுத்தும் 'ராம் கதா குஞ்ச்' தாழ்வாரம் கட்டப்படும் எனவும் அவர் கூறினார்.