காங்கிரஸின் கையை வைத்தை அதன் கண்ணை குத்தவைக்கும் செயலில் பா.ஜனதா ஈடுபடத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ்க கட்சிக்கு பீகாரில் பெரிய சரிவு ஏற்பட்ட நிலையில், அடுத்ததாக குஜராத்தில் பெரிய அடி விழுந்துள்ளது. அனைத்துக்கும் வகேலேதான் காரணம்..

பல ஆண்டுகளுக்கு முன் இதே வகேலாவை வைத்து பா.ஜ.,வை உடைத்தது காங்கிரஸ். தற்போது அதே வகேலாவை வைத்து பா.ஜ., பழி வாங்குகிறது.

பீகாரில், நிதிஷ்குமார் அரசில் லாலு கட்சியும், காங்., கட்சியும் இடம் பெற்று இருந்தன. ஆனால், கூட்டணி மாறியதில், வெறும், 27 எம்.எல்.ஏ.,க்களை வைத்திருக்கும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டு விட்டது.

ஆனால், குஜராத்தில் அப்படி ஒரு நிலை இல்லை. வலுவான எதிர்க்கட்சியாகத்தான் காங்கிரஸ் இருந்து வந்தது. தற்போது மாநிலங்களவை எம்.பி., தேர்தல் என்ற பெயரில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இந்தத் தேர்தலில், காங்., சார்பில் அக்கட்சியின் தலைவரான சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் போட்டியிடுகிறார். இவர் ஏழு முறை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். குஜராத் மாநிலத்தில், மூத்த காங்., தலைவராக கருதப்படுபவர். அவரது வெற்றி தான் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

குஜராத்தில் மாநிலங்களவை எம்.பி., தேர்தலில் வெற்றி பெற, 46 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. காங்கிரசிடம், 57 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர்.

இதில், ஏழு பேர், ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவாக ஓட்டு போட்டு கட்சி மேலிடத்திற்கு முதல் அதிர்ச்சியை தந்தனர்.

இதன்பிறகு, காங்., மூத்த தலைவர் சங்கர் சிங் வகேலா கட்சியில் இருந்து விலகி அடுத்த அதிர்ச்சியை தந்தார். இதை தொடர்ந்து ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வாக ராஜினாமா செய்ய தொடங்கினர்.

நிலைமை இப்படியே போனால், அகமது பட்டேல் வெற்றி பெற மாட்டார் என தெரிந்து தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை இரவோடு இரவாக பெங்களூருவுக்கு, ‘கடத்தி' சென்றது காங்., மேலிடம்.

இதில், அகமது பட்டேலுக்கு மக்கள் செல்வாக்கு கிடையாது. ஆனால், வகேலா சத்ரிய இனத்தை சேர்ந்தவர். மக்கள் செல்வாக்கு மிகவும் அதிகம். தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ள வகேலா தனி கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், தனது மகன் மகேந்திர சிங் வகேலாவுக்கு பா.ஜ.,வில் முக்கிய இடத்தை பெற்று தரும் முயற்சியிலும் வகேலா ஈடுபட்டுள்ளார். இதற்கு பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவின் ஆசியும் உள்ளது.

இதற்கு முன், கேசுபாய் பட்டேல் தலைமையிலான பா.ஜ., அரசை வகேலா மூலம் காங்கிரஸ் கவிழ்த்தது. காங்., ஆதரவுடன் வகேலா முதல்வரானார். அப்போது முதல் காங்கிரசில் செல்வாக்கு மிக்க தலைவராக தான் வகேலா இருந்து வந்தார்.

தற்போது அதே வகேலா மூலம் காங்கிரசை பா.ஜ., பழி வாங்க தொடங்கி உள்ளது. மாநிலங்களவை எம்.பி., தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத நிலையை பா.ஜ., உருவாக்கி விட்டது.