பட்ஜெட் தாக்கல் பணியில் பிஸியாக இருந்த தற்காலிக நிதியமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல்,  அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழக பொறுப்பளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை பாஜக மேலிடம் நியமித்தது. அவர் ஜனவரி 17ஆம் தேதி தமிழக வர இருந்தார். ஆனால், திடீரென மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அமெரிக்காவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால், அவர் வகித்துவந்த நிதித் துறை பியூஸ் கோயலுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்கு குறைந்த காலஅவகாசமே இருந்ததால், டெல்லியில் முகாமிட்டு அந்தப் பணிகளை பியூஸ் கோயல் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதனால், அவர் தமிழகம் வருகையை ரத்துசெய்தார்.

தற்போது பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்துவிட்டதால், பியூஸ் கோயல் இன்னும் சில தினங்களில் தமிழகம் வருவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பியூஸ் கோயல் வருகைக்காக தமிழக பாஜகவும் காத்திருக்கிறது. அதிமுக சார்பில் தொகுதி பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள தங்கமணி, வேலுமணி ஆகியோர் பியூஸ் கோயலுக்கு நெருக்கமாக உள்ளார்கள். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோடும் நெருக்கமாக உள்ளனர்.

இந்த இரு அமைச்சர்களும் எப்போது டெல்லி சென்றாலும் பியூஸ் கோயலைச் சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பாஜகவுடனான கூட்டணிக்கு தம்பிதுரை, பொன்னையன் போன்றவர்கள் கலகக்குரல் எழுப்பிவரும் நிலையில், இந்த இரு அமைச்சர்கள் மூலமாகத்தான் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக அதிமுகவிலும் கூறப்படுகிறது. ஓரிரு நாட்களுக்கு முன்பு தங்கமணியும் வேலுமணியும் டெல்லி சென்றபோதுகூட, பட்ஜெட் பிஸிக்கு இடையேயும் பியூஸ் கோயலை இவர்கள் சந்தித்துவிட்டு வந்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி பியூஸ் கோயல் மூலமாகத் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடந்துவருகின்றன.

தற்போது பட்ஜெட் பணி முடிந்துவிட்டதால், தமிழக கூட்டணி விவகாரத்தை பியூஸ் கோயல் கையில் எடுக்க இருப்பதாகவும், அதிமுகவுடனான கூட்டணியை இறுதி செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக பாஜகவினர் தெரிவிக்கிறார்கள். அதிமுகவோடு மட்டுமல்ல பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது பற்றியும்  தமிழக வருகையின்போது பியூஸ் கோயல் ஆலோசிக்க இருக்கிறார். பிப்ரவரி 10 மற்றும் 19ம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உத்தேசித்துள்ளதால், இந்த இரு தேதிகளுக்குள் கூட்டணி இறுதி செய்யப்படும் என்று தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.