பாஜக எம்.பி சாத்வி பிரக்யா பொது இடங்களில் வாய்திறக்க கட்சி தலைமை அதிரடியாக தடை விதித்துள்ளது. 

போபாலைச் சேர்ந்த பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை கூறி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான பாபுலால் கவுரின் அஞ்சலி கூட்டத்திற்கு சென்ற எம்.பி. சாத்வி பிரக்யா தாகூர், எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துகிறார்கள் என்று சந்தேகம் இருப்பதாகவும், இந்த விஷயத்தில், கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடந்து முடிந்த மக்களவை தேர்தல் சமயத்தில் மகாராஜ்ஜி என்னிடம் வந்து, பாஜகவுக்கு இது மிகவும் மோசமான நேரம். எதிர்க்கட்சிகள் உங்கள் கட்சி மற்றும் தலைவர்களுக்கு எதிராகத் தீய சக்திகளைப் பயன்படுத்துகின்றன. எனவே இந்த சூழலில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என என்னிடம் எச்சரித்தார். அதன் பிறகு நான் அதை அடியோடு மறந்து விட்டேன். 

ஆனால், அப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அவர் உண்மையைக் கூறியுள்ளார் என்று எனக்கு தோன்றுகிறது. ஒருவர் பின், ஒருவராக கட்சியின் முன்னணித் தலைவர்கள் உயிரிழந்து வருகின்றனர். அன்று மகாராஜ்ஜி சொன்னதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இதை எல்லாம் நீங்கள் நம்புவீர்களா இல்லையா என எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இது உண்மை என்றே தோன்றுகிறது என கூறி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. 

இந்நிலையில், சாத்வி பிரக்யா செய்தியாளர்களிடம் பேச பாஜக தலைமை தடை விதித்துள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் சாத்வி பிரக்யா தெரிவிக்கும் சர்ச்சை கருத்துகளை உடனடியாக கட்சி தலைமையிடத்துக்கு தெரிவிக்கும்படி மாநில தலைமைக்கு அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.